திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வயதான சகோதரிகள் தங்களது முதுமையில் மருத்துவ சிகிச்சை மற்றும் ஈமக் காரியங்களுக்கு என்று ரூ. 46,000 சேமித்து வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் சேர்த்து வைத்த அத்தனை ரூபாயும் தடை செய்யப்பட்ட நோட்டுக்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே பூமலூரைச் சேர்ந்தவர்கள் கே. ரங்கம்மாள் (75), இவரது சகோதரி பி. தங்கம்மாள் (72).
இவர்கள் இருவரும் ஆடு மேய்த்து சிறுக சிறுக பல ஆண்டுகளாக பணம் சேமித்து வந்துள்ளனர். இவர்களது மருத்துவ செலவு மற்றும் இறந்த பின்னர் செய்யப்படும் ஈமக் கிரியைகளுக்கு என்று சேமித்து வந்துள்ளனர். இப்படி இவர்கள் சேமித்த பணத்தின் மதிப்பு ரூ. 46,000.
ரங்கம்மாளுக்கு ஏழு குழந்தைகள். தங்கம்மாளுக்கும் 6 குழந்தைகள். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தங்கம்மாளுக்கு ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது சேமித்து வைத்த பணம் தன்னிடம் உள்ளது என்று தங்கம்மாள் கூறியுள்ளார்.
பணத்தை எடுத்துப் பார்த்தபோது அதில், தடை செய்யப்பட்ட நான்கு 1000 ரூபாய் நோட்டுக்களும், மற்றவை 500 ரூபாய் நோட்டுக்களாக மொத்தம் ரூ. 24,000 இருந்துள்ளது. அப்போது தனது சகோதரியும் பணம் சேமித்து வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதை ரங்கம்மாள் மறுத்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு ரங்கம்மாள் சென்றார். அவருக்கு கேட்ராக்ட் சிகிச்சை தேவைப்பட்டது. அப்போது அவரிடம் ரூ. 22,000 இருந்துள்ளது. அனைத்தும் தடை செய்யப்பட்ட ரூ. 500 நோட்டுக்கள் என்று இவரது மகன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரங்கம்மாளின் மகன் செல்வராஜ் கூறுகையில், ''2016இல் ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டபோது, எனது தாய் மற்றும் சித்தியிடம் தெரிவித்தோம். அப்போது அவர்கள் இருவரும் பணம் சேமிக்கவில்லை என்று கூறிவிட்டனர். அவர்கள் வைத்திருக்கும் பணத்தை அறிந்து கொள்வதற்காக நாங்கள் பொய் கூறுகிறோம் என்று நினைத்துக் கொண்டார்கள்.
இந்தப் பணத்தை பூமலூரில் பல கடைகளில் கொடுத்து செல்லுபடியாக்க முயற்சித்துள்ளனர். ஆனால் செல்லவில்லை. காலம் முழுவதும் உழைத்த பணம் அனைத்தும் தற்போது செல்லாதது ஆகிவிட்டது'' என்றார் வருத்தத்துடன்.